சந்தை தேக்கநிலை பாதுகாப்பான முதலீட்டின் அவசியம்

சந்தை தேக்கநிலை: பாதுகாப்பான முதலீட்டின் அவசியம்

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாக சந்திக்காத ஒரு பிரச்னையை தற்போது சந்தித்து வருகின்றனர். அதாவது கடந்து இரண்டு ஆண்டுகளாக பங்குகளில் இருந்து குறிப்பிடத்தக்க லாபம் எதுவும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போதைய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சராசரி வயதை பார்க்கும் போது இந்த சவால் மேலும் பிரச்னைக்குரியதாக மாறுகிறது. இந்த முதலீட்டாளர்களில் பலரும் கோவிட் தொற்றுக்கு பின் சந்தைக்குள் வந்தவர்கள். இவர்கள் இதுவரை ஒரு நீண்ட கால சரிவை கண்டிருக்க மாட்டர்கள். கோவிட் வீழ்ச்சிக்குப் பிறகு பங்குச்சந்தைக்கு வந்த இவர்கள் பெரும்பாலும் சந்தையின் ஏற்றத்தை மட்டுமே பார்த்துள்ளனர்.

இந்த வகையான முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையில் பொறுமையாக பல ஆண்டுகள் முதலீடு செய்து லாபத்துக்காக காத்திருப்பதாக தெரியவில்லை. அதற்குப் பதிலாக, சந்தையில் ஏற்படும் ஒவ்வொரு சிறிய வீழ்ச்சியையும் முதலீட்டாளர்கள் சாதகமாக்கிக் கொண்டு உடனே வாங்குவதையும், சந்தை மீண்டும் ஏற்றத்தை அடைவதை மட்டுமே பார்த்து பழகியிருக்கிறார்கள். ஆனால் தற்போது நிலைமை அப்படி தெரியவில்லை.

பேரியல் பொருளாதார அழுத்தங்கள்

கடந்த ஒரு காலாண்டுக்குள்ளாகவே இந்தியாவில் பேரியல் (Macro) பொருளாதார சூழல் வேகமாக மோசமடைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தைகளின் போக்கிலிருந்து இந்தியா முற்றிலும் விலகி நிற்கிறது. நாட்டின் பொருளாதாரத்தால் தாங்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு எதிர்மறையாக மாறியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது இந்தியாவை விட்டு அவசரமாக வெளியேறி வருகின்றனர். பொருளாதாரம் மீண்டும் எப்போது பழைய வேகத்திற்குத் திரும்பும் என்று கணிக்க முடியாத அளவுக்கு நாம் ஒரு நெருக்கடியான நிலையில் இருக்கிறோம். பங்குச்சந்தை சீக்கிரம் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள். ஆனால், சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குகளை தீவிரமாக விற்று வெளியேறுகின்றனர்.

ஆனால், முதலீட்டாளர்கள் விரும்புவது போல சந்தை இப்போதைக்கு உடனடியாக மீண்டுவிடாது என்றே தோன்றுகிறது. இதற்கு எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் எடுக்க வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களும் இந்தியா மீண்டுவருவதை மேலும் தள்ளிப்போட வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் பருவமழை பெய்யாமல் பொய்த்துபோனால், அது சந்தையின் போக்கை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோக்களை (Portfolios) நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக் கொள்ளத் தயாராக வேண்டும். சந்தையின் இந்த நீண்ட காலத் தேக்கநிலையை எதிர்கொள்ளப் பல முதலீட்டாளர்கள் தயாராக இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது. இது அவர்களின் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துள்ளது.

மதிப்பீடு முரண்பாடு

தற்போது மாறிவரும் பங்குச்சந்தை கட்டமைப்பு சூழ்நிலையை மேலும் சிக்கலாக மாற்றிவருகிறது. முன்னணி நிறுவனங்கள் தங்களின் எதிர்கால வளர்ச்சி குறித்த தெளிவான பார்வையை வழங்கத் தவறியதாலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருவதாலும் லார்ஜ் கேப் (Large-cap) நிறுவனங்களின் மதிப்பீடுகள் சரிந்து வருகின்றன. அதேநேரம், இந்த நிறுவனங்கள் குறித்து எதிர்மறைச் செய்திகள் வந்தால் பங்குச்சந்தை அந்த நிறுவனங்களின் பங்குகளைக் கடுமையாகத் தண்டித்து விலைச் சரிவை ஏற்படுத்துகிறது. இதனால் லார்ஜ் கேப் பங்குகளின் மதிப்பீடு அவற்றின் வரலாற்றுச் சராசரியைக் காட்டிலும் குறையும் போது, அதற்கும் சந்தையின் பிற பிரிவுகளான குறிப்பாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளுக்கும் இடையிலான மதிப்பீட்டு இடைவெளி (Valuation Gap) தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கிறது.

கடந்த ஒரு ஆண்டாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், தங்கள் பணத்தை அதிகமாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களிலேயே முதலீடு செய்து வந்துள்ளனர். பெரிய நிறுவனங்களில் தங்களுக்குத் தேவையான அளவுக்குப் பெரிய லாபம் கிடைக்காது என்று அவர்கள் நினைப்பதே இதற்கு காரணம். முதலீட்டாளர்களின் இந்த லாப எதிர்பார்ப்புகள் அனைத்தும், கோவிட் வீழ்ச்சிக்குப் பிறகு செப்டம்பர் 2024-ம் ஆண்டில் சந்தை எட்டிய உச்சக்கட்ட காலம் வரை கிடைத்த அசாதாரணமான வருவாயை அடிப்படையாகக் கொண்டே இன்னும் உறுதியாக அமைந்துள்ளன.

இதனால் பங்குச்சந்தையில் ஒரு தலைகீழான சூழல் ஏற்பட்டுள்ளது. லார்ஜ் கேப் நிறுவனங்களின் பங்குகளை விட மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் பங்குகள் அதிக மதிப்பில் வர்த்தமாகி வருகின்றன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் நிறுவனங்களின் பங்குகளை தீவிரமாக விற்று வருவதால் இந்த விலை வித்தியாசம் மேலும் அதிகமாகி வருகிறது. ஆனாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகள் குறைந்த மதிப்பில் கிடைப்பதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதவில்லை. முதலீட்டாளர்களின் இந்த போக்கு மாறுவதற்கு காலம் ஆகும் என்பதால், சந்தையின் இந்த முரண்பாடான நிலை இன்னும் மோசமடையவே வாய்ப்புள்ளது. பங்குச்சந்தைக் குறியீடுகள் இன்னும் சரிந்தால் இந்த நிலைமை மேலும் தீவிரமாகும். நாட்டின் பொருளாதாரச் சூழல் மாறி, அந்நிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவிற்குள் பெரிய அளவில் முதலீடு செய்ய வரும் வரை இதே போக்கு நீடிக்கலாம்.

ஆனால், பங்குச்சந்தையின் போக்கு மாறும்போது நிலைமை முற்றிலும் வேறாக இருக்கும். லார்ஜ் கேப் பங்குகள் இப்போது குறைந்த மதிப்பில் கிடைப்பதால், சந்தை திரும்பும்போது முதலீடுகள் அனைத்தும் பெரிய நிறுவனங்களை நோக்கியே குவியும். உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டின் அடுத்தடுத்த மாதங்களில் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்கள் முதலீடுகளை மாற்றி அமைப்பது நல்லது. இது சர்வதேசச் சந்தைகளில் ஏதேனும் அதிர்வுகள் ஏற்பட்டு மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகள் வீழ்ந்தால், அதிலிருந்து முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பாக அமையும். பொருளாதார வளர்ச்சி குறைந்து, அதேநேரம் விலைவாசி உயர்ந்தால் அது சிறிய நிறுவனங்களைத்தான் கடுமையாகத் தாக்கும். இதனால் பயந்துபோகும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அவசரமாகத் திரும்பப் பெற நேரிடலாம்.

பாதுகாப்பை நாடும் முதலீடுகள்

உள்நாட்டு முதலீட்டாளர்கள் இதுவரை மாதம் தோறும் சீரான முறையில் முதலீட்டை மேற்கொண்டு தங்களது ஈக்விட்டி ஃபோர்ட்போலியோவை கட்டமைத்து வந்துள்ளனர். இது அவர்கள் பெரிய அளவில் தங்களின் முதலீட்டுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும், பங்குச்சந்தையின் மூலம் நல்ல லாபம் ஈட்டவும் வழிவகுத்தது. ஆனால், இப்போது அந்த நம்பிக்கையைச் சற்று பாதுகாப்பான திசையில் திருப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலீட்டாளர்கள் அதிக விலையுள்ள பங்குகளைத் தவிர்த்து, நியாயமான மதிப்பில் கிடைக்கும் நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.மேலும் பொருளாதாரத் தேக்கநிலையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், முதலீட்டாளர்கள் இப்போது பாதுகாப்பான பங்குகளை நோக்கித் தங்கள் கவனத்தை மாற்ற வேண்டும். சந்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வரை, லார்ஜ் கேப் எனப்படும் பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்வதே இப்போதைய சூழலில் அவசியம் ஆகும்.

பொருளாதாரம் வேகமாக வளரும்போது மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகள் அதிக லாபம் தரும் என்பது உண்மைதான். ஆனால் அதே சமயம், பொருளாதார வளர்ச்சி குறையும் போது பெரிய நிறுவனங்களின் பங்குகள் தரும் பாதுகாப்பும் நமக்குத் தேவை. இந்த மாற்றத்தை முதலீட்டாளர்கள் உடனடியாகச் செய்ய வேண்டும்.

Scan the code