பல பத்தாண்டு காலமாக பட்ஜெட் உரையை கவனித்தும் ஆராய்ந்து வரும் முதலீட்டாளர்களுக்கு ஒரே செய்தியை மட்டும் தொடர்ந்து உணர்த்தி வருகிறது. அதாவது பட்ஜெட்டை தலைப்புகளை கடந்து நாம் பார்க்கவேண்டும் என்பதையும் சந்தையில் தேவையற்ற சத்தங்களை புறக்கணிக்க வேண்டும் என்பதையும்தான் இந்த பட்ஜெட் உரையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். பட்ஜெட் என்பது பெரு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இருப்பது பல ஆண்டுகளாகவே குறைந்துவிட்டது. பெரும்பாலான நேரங்களில் பட்ஜெட், கொள்கை அளவிலான மாற்றங்களை தெரிவிக்கும் ஒரு குறிப்பாகவே இருக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்தின் நிதி நிலைமையையும் அதன் முதலீட்டு நோக்கத்தையும் காண்பிக்கும் வகையில் அமைகின்றன.
2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பல முக்கியமான விஷயங்களை சிறப்புடனும் சமநிலையுடனும் அணுகுகின்றன. தொழில் புரிவதை எளிதாக்கும் (Ease of Doing Business) நோக்கம் இந்த பட்ஜெட்டில் வெளிப்படுகிறது. மேலும் சமூக நலத்திட்டங்கள் தொடரும் என்பதை உறுதிப்படுத்துகிறது. செமிகண்டக்டர் துறைக்கான ஊக்கத்தொகை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய திறன் மையங்களுக்கான (GCC) குறைந்தபட்ச லாப வரம்பு 15.5 சதவீதம் என்று நிர்ணயித்து ’சேப் ஹார்பர் மார்ஜின்’ மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தரவு மையங்களை அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அரசின் மூலதன செலவை 11.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 12.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இவைதான் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகள். இதனால், பங்குச்சந்தை எந்தவித திருப்தியையும் அடையவில்லை. ஏனெனில் பட்ஜெட்டில் மிக பெரியதான ஒரு அறிவிப்பே எல்லோருடைய கவனத்தையும் பெறும். அப்படியான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை.
அனைத்து தரப்பினரின் கருத்துகளை அரசு கேட்டு செயல்பட்டிருப்பதன் வெளிப்பாடே இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. ஏராளமான கட்டமைப்பு மாற்றங்களை இந்த பட்ஜெட்டில் அரசு செய்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்வதை வரவேற்கும் வகையில் மாற்றியதோடு அரசாங்கத்துக்கும் வரி செலுத்துபவருக்கு இடையே சிக்கலை குறைக்கும் வகையிலும் இந்த பட்ஜெட் உள்ளது. புரோமோட்டர்கள் அல்லாதவர்களுக்கு பை பேக் (Share Buyback) மீது விதிக்கப்படும் வரியை மீண்டும் நீண்டகால முதலீட்டு ஆதாய வரி (LTCG) மற்றும் குறுகிய கால முதலீட்டு ஆதாய வரி (STCG) விகிதங்களுக்கு மாற்றிய முடிவு பங்குதாரர்களின் கருத்துகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்தற்கான அறிகுறியாகவே பார்க்கலாம். இதற்கு முன் வருமானத்தை தெரிவிக்காமல் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாமாக முன்வந்து தெரிவித்து செயல்பட இந்த அறிவிப்பு ஊக்கப்படுத்தும்.
தொழில் தொடங்குவதை எளிமையாக்குதல் (Ease of doing business) என்பது பலருக்கு ஒரு வழக்கமான சொல்லாகத் தோன்றினாலும், செயல்பாட்டு ரீதியாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாம் அடைந்தால், அது பொருளாதார வளர்ச்சியில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும். இந்தத் துறையில் ஏற்படும் சிக்கல்களால் பெரிய முதலீட்டு முடிவுகள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வரிக் கொள்கை தொடர்பான சிக்கல்களில் தெளிவு அளித்தல், பொதுத்துறை நிறுவனங்களுடன் MSME-க்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு TReDS தளங்களில் தடையற்ற கட்டண முறைகளை உருவாக்குதல், அரசுடனான மக்களின் தொடர்புகளை எளிதாக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல் மற்றும் சீர்திருத்தப் பயணத்தை வேகப்படுத்தும் ஏராளமான கொள்கை மாற்றங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்குவதற்கான தனது உறுதியை இந்த பட்ஜெட் காட்டுகிறது.
ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு எத்தகைய பலன்களை தரும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினம். ஆனால் தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து நீண்ட கால அடிப்படையில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதே நியாயமானது. ஆனால் சந்தையின் சவால்களை எதிர்கொள்ள இவை போதுமானதா? என்று கேட்டால் ’இல்லை’ என்பதே பதிலாக இருக்கிறது.
இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய சவால்கள் அனைத்தும், சர்வதேச முதலீட்டாளர்கள் வெளியேறுவது, இந்தியாவை தவிர்த்து மற்ற வளர்ந்து வரும் சந்தைகளில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வது, புரமோட்டர்கள் தங்களது பங்குகளை விற்க அதிகமாக ஆர்வம் காட்டுவது ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதனால் மொத்தமாக சந்தையிலிருந்து கேபிடல் வெளியேறும் நிலைமையையே எதிர்கொள்கிறோம். இங்குதான் டிரம்பின் வர்த்தக உடன்படிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதிக்கான ஒரு உகந்த சூழல் இந்த உடன்படிக்கை மூலம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையல்ல.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போதும், இந்தியாவின் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போதும், இந்தியப் பங்குகளின் மதிப்பீடு (Valuation) தற்போது மிக அதிகமாக இருக்கிறது. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) தொடர்ந்து விற்பதும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் (DII) மற்றும் சிறு முதலீட்டாளர்கள் சீராக வாங்குவதும் என சந்தை மிகவும் எளிதாகக் கணிக்கக்கூடிய நிலையிலேயே இருந்து வந்தது. கடந்த ஓர் ஆண்டாக இதே நிலையே நீடித்து வருகிறது. மேலும் பட்ஜெட்டுக்கு முந்தைய நாட்களில் சந்தை ஒருவித பதற்றத்துடனும் பலவீனமான நிலையிலுமே காணப்பட்டது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மனநிலையை மாற்றி, தற்போதைய சந்தை சூழலை விரைவாக சீரமைத்து, நீண்ட கால சந்தை நிலைத்தன்மையை இந்த பட்ஜெட் வழங்கும் என்று சந்தை எதிர்பார்த்தது. ஆனால் கொள்கை ரீதியான நிலைப்புத்தன்மையை ஏராளமாக வழங்கினாலும், சந்தை நிலைத்தன்மை குறித்து எவ்வித முயற்சியும் எடுக்காமல் அதை சந்தையிடமே விட்டுவிட்டது. சந்தை மதிப்பில் விரைவான மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் நிலைத்தன்மை உருவாகக்கூடிய ஒரு புள்ளியில் சந்தை அமையும்போதுதான் இது சாத்தியமாகும். முந்தைய பட்ஜெட்டுகளை விட இது முற்றிலும் மாறுபட்டது. நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்களை கொண்டிருக்கிறது. அதேசமயம் சந்தை எங்கே இருக்க வேண்டும் என்பதை சந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டது.
பட்ஜெட் அறிவிப்புகள் ஒருபுறம் இருக்க, இன்று காலை இந்தியப் பொருளாதாரத்திற்கு மற்றுமொரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தி கிடைத்தது. பல மாதங்களாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அதிகாரப்பூர்வமாக வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்க இறக்குமதி வரி (Tariff) முந்தைய உச்சமான 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக்கொண்டு, அமெரிக்காவிடமிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் தாக்கம் இன்று இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. பட்ஜெட் அறிவிப்புகளால் எதிர்மறை நிலையில் இருந்த பங்குச்சந்தை, இந்த அறிவிப்பு வந்த பிறகு நேர்மறை போக்குக்கு சென்றது. இருப்பினும் வரும் காலங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுகள் மேற்கொள்வதன் அடிப்படையிலும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் சந்தை இயங்கும் என்று எதிர்பார்க்கலாம். முதலீட்டாளர்கள் தொடர்ந்து சந்தை கொடுக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்களின் போர்ட்போலியோவை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.


