முதலீட்டு வெற்றியை மிக வேகமாகவும் மிகத் தாமதமாகவும் துரத்துவதினால்தான் பெரும்பாலும் நமக்கு முதலீட்டு தோல்விகள் ஏற்படுகிறது. வெற்றியின் உள்ளேயே தோல்விக்கான விதை விதைக்கப்படுவதுதான் ஈக்விட்டி முதலீட்டில் மிகப் பெரிய முரண். வெற்றியை அளவுக்கு மீறி பெரிதுபடுத்தும் போது, அதுவே எதிர்கால தோல்விக்கான விதையாக மாறுகிறது.
இதற்கான காரணங்களை நாம் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமல்ல. ஒரு முதலீடு ,வெற்றியை கொடுத்தப் பிறகே அதை நோக்கி பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஓடுகின்றனர். மேலும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் வெற்றிகரமான முதலீட்டு யோசனைகளுக்கு அதிக விலை கொடுக்கிறார்கள். அதிக மதிப்பீட்டில் அந்த முதலீட்டை மேற்கொள்கிறார்கள். இது மிகப் பெரிய ரிஸ்க். இருப்பினும், முதலீட்டில் நாம் கடந்த கால பாடங்களை ஞாபகப்படுத்திக் கொள்ள மறந்துவிடுகிறோம். முன்பு செய்த அதே தவறுகளை புதிய இடங்களில் செய்கிறோம். இதனால்தான் நீண்ட கால அடிப்படையில் சந்தையை மிஞ்சிய லாபம் ஈட்டுவது மிகவும் கடினமாகப் பார்க்கப்படுகிறது.
சமீப ஆண்டுகளில் இந்திய ஈக்விட்டி சந்தையில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு முதலீடுகள் அனைத்தும் சந்தையில் அதிக மதிப்புள்ள மற்றும் ஆபத்தான பகுதிகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அந்த அணுகுமுறை எப்போதும் முதலீட்டாளருக்கு சாதகமாக அமைவதில்லை. இறுதியாக நாம் என்ன தவறு செய்தோம் என்று முதலீட்டாளர்களையே யோசிக்க வைத்து விடுகிறது. இதற்கான விடைகளை கண்டறிவது அவ்வளவு கடினமல்ல, நம்முடைய கடந்தகால செயல்களிலேயே விடைகள் உள்ளன.
தவறுகள் எங்கே நடந்தன?
2025-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தையில் எஸ்ஐபி முதலீடுகள் தவறான திசையில் சென்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. சந்தைக்குள் மாற்று திசையில் எதிலும் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்பவில்லை. மாறாக, சமீபத்தில் வெற்றி பெற்ற யோசனைகளை மட்டுமே துரத்த விரும்பினர்.
2025-ம் ஆண்டில் முதலீட்டாளர்களின் எஸ்ஐபி தேர்வுகள், ஆபத்தான மற்றும் அதிக மதிப்பிடப்பட்ட பகுதிகளில் (Themes) பணம் குவிந்ததைக் காட்டுகின்றன. எஸ்ஐபி மூலம் ஈக்விட்டி சந்தைக்கு வந்த சுமார் 3,00,000 கோடி ரூபாயில் கணிசமான பகுதி ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பண்ட்-களுக்குச் சென்றன.
இதற்குத் தெளிவான காரணம் ‘ரீசென்சி பயாஸ்’ (Recency Bias – சமீபத்திய நிகழ்வுகளின் தாக்கம்). முதலீட்டாளர்கள் சமீபத்தில் சிறப்பாகச் செயல்பட்ட பிரிவுகளைத் துரத்தி, தங்கள் பணத்தின் பெரும்பகுதியை அதில் போட்டனர். இது எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு பிரச்சனையாக உருவெடுக்கும்.
ஓர் ஆண்டில் பங்குச்சந்தை முதலீட்டில் மிகச் சிறப்பாகச் செயல்படும் ஒரு உத்தி, அடுத்த ஆண்டிலும் அரிதாகவே வேலை செய்யும். அரிதான விதி விலக்குகளை தவிர தீமாட்டிக் முதலீடு (Thematic Investing), நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து வேலை செய்வதில்லை. ஆனாலும், ஒரு வருடம் வேலை செய்த அதே ‘தீம்’களை (Themes) அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நாம் பின்பற்ற முனைகிறோம். பெரும்பாலான முதலீடுகள் நாம் எதிர்பார்க்கும் மதிப்பை தாண்டிய பிறகே நடக்கிறது. முதலீடு செய்த பிறகு நமக்கு இந்த அணுகுமுறை விரக்தியையே தருகிறது. ஏனெனில், அந்தத் துறையில் முதலில் விலை ஏறாமல் அப்படியே இருப்பது ஏற்படும், அதைத் தொடர்ந்து மதிப்பீடு குறைவதால் பெரிய விலை வீழ்ச்சி ஏற்படும்.
தங்கள், முதல் சந்தை சுழற்சியில் (First Cycle) இருக்கும் பெரும்பாலான சிறு முதலீட்டாளர்கள் தற்போது இதை அனுபவித்து வருகின்றனர். ஏனெனில் அவர்கள் 2023 மற்றும் 2024-ம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அதே துறைகள் அதே பங்குகளை துரத்தினர். கடந்த கால ‘தீம்’களில் முதலீடு செய்தவர்கள், அவற்றை மறுபரிசீலனை செய்து புதிய ட்ரெண்டிங் துறைகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் ஒரு ஆண்டாக 2026ம் ஆண்டு இருக்கக்கூடும்.
ட்ரெண்டிங் துறைகளுக்கு மாறுவது எப்போதும் சரியான நேரத்தில் நடக்க வேண்டும். நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால், முன்கூட்டியே நுழைய வேண்டும். முக்கியமாக, நீங்கள் ஒருபோதும் தாமதமாகிவிடக் கூடாது.

2025-ம் ஆண்டில் நம் போர்ட்ஃபோலியோ நிலைப்பாடு எப்படி இருந்தது என்று பார்ப்போம். பெரும்பாலான முதலீட்டாளர்கள் மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளை அதிகளவில் வைத்திருந்தனர். அவர்கள் லார்ஜ்-கேப் பங்குகளை வாங்க விரும்பவில்லை. சுழற்சிப் பங்குகள் (Cyclicals) மீது அனைவருக்கும் வெறுப்பு இருந்தது. உலோகங்கள் பக்கம் யாரும் செல்லவில்லை. ஆண்டின் தொடக்கத்தில் விலையுயர்ந்த உலோகங்களான தங்கம் மற்றும் வெள்ளி யாருக்கும் பிடித்தமானதாக இல்லை. ஆனால், தங்கமும் வெள்ளியும்தான் கடந்த ஆண்டில் மிகச் சிறந்த ரிட்டர்ன்ஸ் கொடுத்தன. ஆனால் மிகச் சில முதலீட்டாளர்களே இவற்றை போதுமான அளவில் வைத்திருந்தனர். ஆண்டு இறுதியில் நாளை என்பதே இல்லை என்பது போல பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த உலோகங்களை துரத்தி கொண்டிருந்தனர்.
நன்றாக செயல்படும் ஒரு சொத்து பிரிவையோ அல்லது ’தீம்’-யோ நீங்கள் எப்போது வாங்குகிறீர்கள் என்பது முக்கியம். நீங்கள் மிகவும் தாமதமாக வாங்கினால் அது கஷ்டத்தை மட்டுமே தரும். முதலீட்டில் வெற்றி என்பது முன்கூட்டியே கணித்து வாங்குவதுதான். ஒரு தீம் அல்லது துறையில் முன்கூட்டியே கணித்து வாங்குவது உங்களுக்கு பெரிய நன்மையை தருகிறது. வாங்குவதற்கும், போதுமான அளவு முதலீடு செய்வதற்கும், சந்தை சரிவின் போது முதலீட்டை அதிகரிப்பதற்கும், நம்பிக்கையுடன் அளவை உயர்த்துவதற்கும் உங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கிறது. நீங்கள் தாமதமாக வந்தால், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சுருங்கி, உங்கள் முதலீட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.
சரியான பாதை
உங்கள் போர்ட்ஃபோலியோவை சரியாக கட்டமைப்பதே தற்போதைய தேவை. தங்களைச் சிறப்பாக நிலைநிறுத்திக் கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 2026ம் ஆண்டு நன்றாக அமையும்.
நமது முதலீடுகளுக்குப் பொருளாதாரத்தைப் பார்த்து முடிவெடுக்கும் ‘Top-down’ அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம். கடந்த காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட கிளாசிக் ‘பாட்டம்-அப்’ (Bottom-up) அணுகுமுறை இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றில் மட்டுமே பலனளிக்கலாம்.
பேரியல் பொருளாதாரக் (Macro Ecocmics) காரணிகள் சரியாக அமையும்போது, பணப்புழக்கம் திரும்பத் தொடங்கும். உலகளாவிய மூலதனம் நாம் சமீபத்தில் காணாத வேகத்தில் திரும்ப வரக்கூடும். அப்படி வரும்போது, பெரிய நிறுவனங்களே அவர்களின் முதல் இலக்காக இருக்கும். இது சந்தையை மாற்றும். மற்ற பகுதிகளை விட லார்ஜ்-கேப் பங்குகளில் அதிகக் கவனம் செலுத்தப்படும். இந்த மாற்றம் நடப்பதற்கு முன்பே உங்கள் போர்ட்ஃபோலியோவைச் சரியாக அமைப்பது முக்கியம். மேற்சொன்ன மாற்றம் தாமதமானாலோ அல்லது நடக்கவில்லை என்றாலோ கூட, உங்கள் போர்ட்ஃபோலியோ சரியான நிலையில் இருந்தால் நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பீர்கள். முன்னெப்போதையும் விட இப்போது ‘பொசிஷனிங்’ (Positioning) மிக முக்கியம்.
2026-ம் ஆண்டின் மிகப்பெரிய ஆபத்து
தங்கம் மற்றும் வெள்ளி போன்ற சொத்துக்கள் (Defensive assets) சொத்து ஒதுக்கீட்டிற்கு ஆபத்தாக மாறுவது அரிதானது. ஆனால் இந்த சொத்துக்கள் அதிக லாபத்தை தருவதே இதற்கு ஆபத்தாக மாறக்கூடும். எந்த விலையிலும் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவதில் ஆபத்து இல்லை என்று முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். இத்தகைய குருட்டு நம்பிக்கைகள் முதலீட்டிற்குள் வரும்போது பாதிப்பை ஏற்படுத்தும். முந்தைய வரலாறு நமக்குக் கடுமையான பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது.
விலையுயர்ந்த உலோகங்கள் உச்சத்தில் இருந்து சரியும்போது, அவை மிகக் கடுமையாக விழும் மற்றும் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகலாம். புவிசார் அரசியல் அவற்றின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது.
தவிர்க்க வேண்டிய 3 தவறுகள்
1. அதிக விலையில் கண்ணை மூடிக்கொண்டு தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவது.
2. சொத்து ஒதுக்கீட்டில் அவற்றின் அளவைக் குறைக்க மறுப்பது.
3. ‘Bubble’ நிலையில் உள்ள பகுதிகளில் ஊக வணிகம் செய்வது.
முதலீட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம். ஆனால், நாம் முதலீடு செய்யும் இந்த நிச்சயமற்ற காலங்களில் ‘எதைச் செய்யக்கூடாது’ என்பதை அறிந்துகொள்வது அதைவிட முக்கியமாகி வருகிறது.
முதலீட்டுப் பாதையைச் சரியான நேரத்தில் சரிசெய்வது, சொத்து ஒதுக்கீட்டை முறைப்படுத்துவது மற்றும் ஈக்விட்டியில் சரியான இடத்தில் நம்மை நிலைநிறுத்துவது ஆகியவையே 2026-ம் ஆண்டில் முதல் மூன்று முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்.


