முதலீட்டாளராகிய நாம் எந்த சந்தை சூழலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்வது அவசியம். சந்தையின் தன்மையைத் தெளிவாகத் தெரிந்தால் தான் நம்மால் அதில் சிறப்பாகப் பயணிக்க முடியும். சில சந்தைகள் நீண்ட கால அடிப்படையில் ஒரே திசையிலான வளர்ச்சியை அல்லது மாற்றத்தைக் கொண்டிருக்கும். இடையில் சில சிறிய தடங்கல்கள் இருந்தாலும் அதன் போக்கில் பெரிய மாற்றம் இருக்காது.
நீண்டகால காளைச் சந்தைகள் (Secular Bull Markets) பெரும்பாலான பங்குகளின் விலையை உயர்த்துகின்றன, இது ஒவ்வொரு முதலீட்டாளரையும் வெற்றி பெற்றவர்களாக காட்டுகிறது. இந்த மாதிரியான சந்தை வெற்றி பெறுவதற்கு எளிதானதாக தோன்றும். மறுபுறம் நீண்டகால கரடிச் சந்தைகள் (Secular Bear Markets ) மதிப்பீட்டை (Valuations) சரிவடைய செய்கின்றன. இது திறமையான முதலீட்டாளர்களை கூடச் சாதாரணமானவர்களாக காட்டுகிறது.
2020-ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பங்குச்சந்தை ஒரு நீண்டகால காளை சந்தையாக நீடித்ததை பார்த்தோம். அந்த காலக்கட்டத்தில் முதலீடு செய்வது எளிதாக தோன்றியதுடன் பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஓரளவு நல்ல லாபத்தையும் அடைந்தனர். ஆனால் 2025ம் ஆண்டு மற்றும் 2026ம் ஆண்டுகள் முற்றிலும் மாறுபட்ட புதிய வகையான சந்தைக்கு தயாராகியுள்ளன.
தேக்க நிலையில் சந்தை
இப்போதைய சந்தை போக்கு ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதிகப்படியான ஏற்ற இறக்கங்களும் அடிக்கடி திசைமாறும் போக்குகளும் அதிகம் காணப்படுகின்றது. சந்தை ஏற்றத்தில் இருந்தபோது எந்த சிரமமும் இன்றி லாபம் அடைந்த முதலீட்டாளர்கள் இப்போது அதேபோன்று வெற்றியை தரும் ரகசியத்தை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர். நீண்டகால காளைச் சந்தையில் பெரும்பாலும் எல்லா போர்ட்போலியோவும் நல்ல லாபத்தை ஈட்டுகின்றன. ஒரு சில வெற்றி பங்குகளை கொண்டிருப்பவர்கள் மற்றவர்களை விட அதிக லாபம் ஈட்டுகின்றனர்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருக்கும் சந்தை போக்கில் பெரும்பாலான போர்ட்போலியோக்கள் லாபம் ஈட்டுவதற்கு சிரமப்படுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வெற்றிப் பங்குகளைக் கொண்ட ஒருசில போர்ட்போலியோக்கள் மட்டுமே சந்தையை விட அதிக லாபத்தை ஈட்டுகின்றன. அந்த வெற்றியும் சந்தையில் கொண்டாடப்படுகிறது. சந்தையில் இருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் மாற்றங்களைக் கவனித்து, லாபம் ஈட்டியவர்களைப் பாராட்டுவதும், லாபம் ஈட்டாதவர்களை குறை கூறுவதுமாக இருக்கிறார்கள். எப்போதுமே ‘எது வேலை செய்யும்?’ என்ற தேடல் அவர்களிடம் உள்ளது. இத்தகைய சூழலில், முறையான முதலீட்டுத் திட்டத்தை வைத்திருப்பவர்களை விட, சரியான பங்கைக் கணித்து வாங்குபவர்களே புத்திசாலிகள் போன்ற பிம்பம் உருவாகிறது.
பங்குகளை தேர்வு செய்பவர் vs போர்போலியோ நிபுணர்
பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் முறை (Stock-picking approach) என்பது அடுத்த பெரிய வெற்றியைத் தரும் பங்கைக் கண்டறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு டி20 போட்டியில் களம் இறக்கப்படும் ‘பிஞ்ச் ஹிட்டர்’ (Pinch hitter) போல, குறுகிய நேரத்தில் எங்கே பெரிய அளவில் ரன்களை எடுப்பதிலேயே கவனம் செலுத்துவது போன்றது. இந்த முறை சில நேரங்களில் சரிவுகள் ஏற்படும் அபாயத்தை (Downside risk) குறைத்து மதிப்பிடுகிறது. இதன் நோக்கம் பெரிய அளவில் ரன்களைக் குவிப்பதே தவிர, விக்கெட்டைத் தக்கவைப்பது அல்ல. ஆனால், இந்த ‘ஆல்-ஆர்-நத்திங்’ (All-or-nothing) பாணி ஒரு நிதி மேலாளருக்கு (Fund manager) அரிதாகவே பொருந்தும். ஏனெனில், முதலீட்டாளர்கள் பெரிய வீழ்ச்சிகள் இன்றி நிலையான லாபத்தையே எதிர்பார்க்கிறார்கள்.
சந்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கும்போது, திறமையான நிதி மேலாளர்கள் அதிரடி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கிறார்கள். ஏனெனில், திடீர் வீழ்ச்சிகள் முதலீட்டாளர்களின் மன உறுதியைக் குலைத்துவிடும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இப்போதைய சந்தை நிலைமை அதிரடியாக ரன் குவிக்கும் ‘பவர் பிளே’ ஓவர்களைப் போன்றது அல்ல. எனவே நிதானமே அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
சந்தை எப்படியிருந்தாலும் அதிரடியாக முதலீடு செய்து தங்களை நிரூபிக்க நினைக்கும் மேலாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் ஒரு முதலீட்டாளராக, நமக்கு எவ்வளவு ‘ரிஸ்க்’ எடுக்க முடியும் என்பதில் தெளிவு வேண்டும். கடினமான நேரங்களில் நமது முதலீடு எப்படி இருக்க வேண்டும் என்றும், சந்தை ஏறி இறங்குவதை நம்மால் எவ்வளவு தாங்க முடியும் என்றும் நாம் யோசிக்க வேண்டும். இந்த பதில்களை வைத்தே நமது ஃபண்ட் மேனேஜரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது ஏனென்றால், இப்போதைய மந்தமான நிலைக்குப் பிறகு சந்தை எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது.
சந்தை சரிவைச் சந்தித்தால் என்ன செய்வது?
மந்தநிலைக்குப் பிறகு சந்தை மீண்டும் ஏறும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அது எப்போதும் உண்மையாகாது. ஒருவேளை சந்தை இறங்குமுகமாக மாறினால், அதிக ரிஸ்க் எடுத்து வைத்துள்ள முதலீடுகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் நேரடியாக முதலீடு செய்தாலும் சரி, ஒரு ஃபண்ட் மேனேஜர் மூலம் செய்தாலும் சரி, உங்கள் முதலீட்டு முறை உங்கள் பொறுமைக்கும் நஷ்டத்தைத் தாங்கும் சக்திக்கும் ஏற்றவாறு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சந்தை தேக்க நிலையில் இருக்கும்போது, நிதி மேலாளர்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். அப்போதுதான் முதலீட்டாளர்களின் பணத்தைப் நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாக வளர்க்க முடியும். ஆனால், இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் முதலீட்டின் மதிப்பு (NAV) ஒப்பிடப்படுகிறது. யார் முதலிடம் என்ற போட்டி நிலவுகிறது. லாபம் வரும் இடத்தைத் தேடி முதலீட்டாளர்கள் ஓடுகிறார்கள். இந்த நெருக்கடியால், முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்த நிதி மேலாளர்கள் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.
அதிரடியாக முதலீடு செய்யும் போக்கு, சந்தை சரியும்போது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நேரத்தில் ‘கவ்பாய்’ போலத் துணிச்சலாகச் செயல்படுபவர்கள், சந்தை வீழ்ச்சியடையும் போது பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். ஆனால், நிதானமாகவும் முறையாகவும் செயல்படும் மேலாளர்கள் அந்தச் சமயத்தில் புத்திசாலிகளாகத் தெரிவார்கள். சந்தையின் போக்கைப் பொறுத்து முதலீட்டாளர்களின் கருத்துக்கள் நொடியில் மாறிவிடும்.
சரிவைச் சந்திக்கத் தயாராகுங்கள்! சந்தை உயரும்போது லாபம் பார்க்கத் துடிக்கும் நாம், சந்தை சரியும்போது எப்படிப் தற்காத்துக் கொள்வது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், சரிவைச் சமாளிப்பதே உண்மையான முதலீட்டுத் திறமையாகும். 2026-ன் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது பொருளாதார நிலைமை மந்தமாக உள்ளது. எனவே, பழைய லாப கணக்குகளை மறந்துவிட்டு, இப்போதைய நிலைக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு ரிஸ்க் எடுக்காமல், மிகவும் யோசித்துச் செயல்பட வேண்டிய நேரம் இது. இப்போது ஆக்ரோஷமான முதலீட்டை விட, இருக்கும் முதலைப் பாதுகாப்பதே புத்திசாலித்தனம். பங்குகளின் விலை நிலவரங்கள் மாறி வருவதால், நிதி மேலாளர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

