தீபாவளி ஷாப்பிங்கிலும் பணத்தை சேமிக்கலாம்

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி உள்ளது. தீபாவளிக்காக ஒரு மாததுக்கு முன்பு பல்வேறு விஷயங்களை திட்டமிட்டு வாங்க தொடங்கி விடுவார்கள். இது ஒருபக்கம் என்றால், அதற்கான செலவை எப்படி சமாளிப்பது? குறைந்த செலவில் தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடியுமா? என பலரும் யோசிப்பது உண்டு. ஏனெனில், தீபாவளிக்கு கிடைக்கும் போனஸ் தொகை மொத்தமும் செலவாகிவிடுமா? என்ற அச்சமும் பலருக்கு இருக்கும். ஆனால் குறைந்த செலவில், தீபாவளியை சிறப்பாக கொண்டாடலாம்.

தீபாவளி பண்டிகை என்பதே மகிழ்ச்சி, ஒற்றுமை, ஒளி, மற்றும் உறவுகளின் திருநாள். அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டும் அலங்காரத்தில் ஜொலிக்கும். பெரியவர்கள், குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு, பட்டாசு என வீடே குதுகலமாக இருக்கும். இதெல்லாம் ஜாலி என்றாலும், செலவை நினைத்து கவலைப்பட வேண்டிய சூழல் இருக்கும்.

ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக செலவை செய்வதை நம்முடைய மனது ஏற்று கொள்ள நினைக்கும். ஆனால், ஒரு சின்ன திட்டமிடல் இருந்தால் இந்த செலவை கணிசமாக குறைக்க முடியும். இதனால் பணமும் மிச்சமாகும். அதே நேரத்தில் மகிழ்ச்சியும் இருக்கும்.

1. பண்டிகைக்கு தனி பட்ஜெட்

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை என்றாலே உற்சாகம்தான். ஆனால் அதே சமயம்  செலவு ஆகும் வாய்ப்பும் அதிகம். அதாவது முன்கூட்டியே திட்டமிடவில்லை எனில் தீபாவளியை  கொண்டாட்டத்துக்காக சில நேரங்களில் நண்பர்களிடம் கடன் வாங்குவது, கிரெடிட் கார்டில் கடன் வாங்குவது போன்ற சூழல்கள் உருவாகும்.  இதை தவிர்க்க முன்கூட்டியே ஒரு சரியான பட்ஜெட்டை தயார் செய்து, அதன் அடிப்படையில் செயல்பட்டால் பல சிக்கல்கள் தீரும். அதாவது உங்கள் வருமானத்தைப் பொறுத்து, குடும்பத்தில் இது போன்ற பண்டிகை நாட்களில் வழக்கமாக எதில்  அதிக செலவாகிறது என்பதை பட்டியலிடுங்கள்.

பொதுவாக நாம் செலவிடுவது

-உடைகள் & அணிகலன்கள்

-கிஃப்ட் & பட்டாசுகள்

-வீட்டு அலங்காரம் பொருட்கள்  & வண்ண விளக்குகள்

-உணவு பொருட்கள்  & இனிப்புகள்

-பயணம் & டிராவல்

இப்படி பிரித்து செலவுகளை கணக்கிட்டால் எதில் செலவாகிறது என்பதை கவனித்து அதற்கு ஏற்ப நம் திட்டமிட்டு கொள்ளலாம்.

2. பண்டிகைகளுக்கு முன்கூட்டியே வாங்குங்கள்

பண்டிகையின் போது நம் செய்யும் பெரிய தவறு கடைசி நேரத்தில் பொருட்களை வாங்குவது. இதனால் கூடுதல் செலவுதான் ஆகும். அதாவது தீபாவளிக்கு தேவையான பொருட்களை பட்டியலிட்டு, அதை எங்கு வாங்கலாம் என முடிவு செய்ய வேண்டும். அதுமட்டும் இல்லாமல் முன்கூட்டியே வாங்கும் போது அந்த பொருட்களின் விலை எங்கு குறைவாக இருக்கும் என்பதை பார்த்து வாங்க முடியும். கடைசி நேரத்தில் வாங்கும் போது இந்த வாய்ப்பு மிகவும் குறைவு. கடைசி நேரங்களில் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால், அவர்கள் சொல்லும் விலையில் பொருளை வாங்கி வருவோம். இதனால் தேவையற்ற கூடுதல் செலவு ஏற்படும்.

அதுவே தேவையான பொருட்கள், டிரெஸ் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே வாங்கும் போது நமக்கும் பல நன்மைகள் ஏற்படும். அதாவது முன்கூட்டியே வாங்கும் போது ஒரு கடையில் மட்டும் இல்லாமல் இரண்டு, மூன்று கடைக்கு சென்று விலை, தரம் பார்த்து வாங்குவோம்.

சில பொருட்களின் விலையை பேரம் பேசி வாங்க முடியும். இது முன்கூட்டியே வாங்கும்போது மட்டும்தான் சாத்தியம். கடைசி நேரத்தில் இதற்கு வாய்ப்பு இல்லை. இதெல்லாம் விட நமக்கு எந்த விதமான மன அழுத்தமும் இன்றி, ஷாப்பிங்கை சிறப்பாக முடிக்கலாம்.

3. விலையுயர்ந்த பரிசுகளைத் தவிர்க்கவும்

இதுபோன்ற பண்டிகை நாட்களில் நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசளிப்பது வழக்கம். இதன் மூலமாக நம்முடைய அன்பை வெளிப்படுத்துவோம். பரிசளிப்பது என்பது அன்பையும் நினைவுகளையும் வெளிபடுத்தும் செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிக விலை கொடுத்து வாங்கி பரிசு கொடுக்க வேண்டுமென நினைப்பது தவறு. எனவே அதிக விலை பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, சிறந்த மற்றும் அர்த்தமுள்ள பரிசுகளைத் தேர்வு செய்யலாம்.

அதாவது வீட்டிலேயே தயாரிக்கும் இனிப்புகள் அல்லது ஸ்நாக்ஸ் புத்தகங்கள் அல்லது இ-புத்தகங்கள், சப்ஸ்கிரிப்ஷன் பரிசுகள் – இசை, மாத இதழ்கள் அல்லது உடற்பயிற்சி ஆப்கள் ஆகியவற்றை பரிசாக அளிக்கலாம்.  இவை மிகவும் விலை குறைந்தவை ஆகும். அதுமட்டும் இல்லாமல் நீண்டநாள் நினைவில் நிற்கக் கூடியவையாகவும் இருக்கும்.

4. வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள்

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு வீட்டை அலங்காரம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும், புதிய பொருட்களை வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக ஏற்கனவே வீட்டில் உள்ள அலங்காரத்துக்கு பயன்படுத்த பொருட்கள், விளக்குகளை பயன்படுத்தலாம்.  அதாவது முந்தைய ஆண்டுகளில் இருந்தவற்றைச் சரிபார்த்து, சில புதிய பொருட்களை சேர்த்து  அலங்கரிக்கலாம். இதனால் பணமும் சேமிக்கும், கழிவுகளும் குறையும்.

5. இணைந்து கொண்டாடுங்கள்

ஒவ்வொருவரும் தனித்தனியாக பட்டாசு வாங்குவதற்குப் பதிலாக, அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து வாங்கலாம். இது செலவை குறைப்பது மட்டும் இல்லாமல், மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும். அதாவது ஒரு தெருவில் உள்ளவர்கள் அல்லது அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து கொண்டாடலாம்.

உறவினர்கள், நண்பர்கள் இணைந்து ஒருவர் இனிப்பு, ஒருவர் ஸ்நாக்ஸ், ஒருவர் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை செய்யலாம். இதனால் பொறுப்புகள் பகிர்ந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல் உற்சாகமும் பெருகும். இதுபோன்ற தருணங்களை  புகைப்படமாகப் பதிவு செய்ய மறக்காதீர்கள்!

6. கடன் வாங்க வேண்டாம்

வருடத்தில் வரும் ஒருநாள் கொண்டாட்டத்துக்காக கடன் வாங்குவது மிகவும் தவறு. நண்பர்களிடம் கடன் வாங்குவது, கிரெட்டிட் கார்டில் செலவு செய்துவிட்டு அதை  பிறகு EMI-ஆக மாற்றி வட்டி கட்ட வேண்டியதெல்லாம் தேவையற்ற செலவு ஆகும். இது போன்ற செயல்களால் அன்று ஒருநாள் மட்டும் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் அதன் பிறகு நிம்மதி என்பதே இருக்காது. கடன் அல்லது கிரெடிட் கார்டில் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.

உங்கள் திறனுக்குள் மட்டுமே செலவிடுங்கள்

நினைவில் கொள்ளுங்கள் — தீபாவளி என்பது ஒளியின் திருவிழா, கடன் வாங்குவதற்கான நாள்  அல்ல.

இந்த ஆண்டும் தீபாவளி போனஸ் கிடைத்தால், அதை புத்திசாலிதனமாக பயன்படுத்துங்கள். கிடைக்கும் போனஸ் பணத்தில் கொஞ்சம் கொண்டாட்டத்திற்கும், கொஞ்சம் சேமிப்புக்கும் என பிரித்து கொள்வது நல்லது.

தீபாவளி என்பது பணத்தை வீணடிப்பதற்கான நேரம் அல்ல. பண்டிகைகளில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நினைவுகளை உருவாக்குவதற்கான தருணம்.

முன்கூட்டியே திட்டமிடி, புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து, உங்கள் தேவைக்கு ஏற்ப செலவுகளை செய்து பண்டிகையை கொண்டாடினால்  மகிழ்ச்சியும் மனஅமைதியும்  கிடைக்கும்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Scan the code