2025-ஆம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் சேமிப்புப் பழக்கங்களில் பெரிய மாற்றம் நடந்துள்ளது. அதாவது ஒரு காலத்தில் கூடுதல் பணம் கிடைத்தால் அதை ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான முதலீடு என்றும் நம்பினார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்த எண்ணம் மாறியுள்ளது. பலரும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
அதாவது தற்போதைய சூழலுக்கு ஏற்ப ஃபிக்ஸ்ட் டெபாசிட் மட்டும் இல்லாமல், பங்குச் சந்தை முதலீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்ற திட்டங்களையும் தேர்ந்தெடுக்க தொடங்கியுள்ளனர். இது தற்காலிகமான மாற்றம் அல்ல. மக்கள் பலரும் நீண்ட காலத்துக்கு முதலீட்டை உருவாக்க வேண்டும் என்றால் அதில் கட்டாயம் ரிஸ்க் இருக்கும் என்றும், அந்த ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப லாபம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.
பாதுகாப்பிலிருந்து திட்டமிடலுக்கு மாற்றம்…
பல ஆண்டுகளாக இந்தியர்கள் வங்கிக் கணக்கு வைப்பு, ஃபிக்ஸ்ட் டெபாசிட், தங்கம் மற்றும் நிலம் போன்றவற்றை பாதுகாப்பான சேமிப்பாக நினைத்திருந்தனர். இந்த வகையான முதலீட்டு திட்டங்கள் மனநிம்மதி கொடுத்தாலும், இன்றைய சூழலில் அதிக வளர்ச்சியை தரக்கூடிய முதலீடாக இல்லை என்பதை பலரும் உணர தொடங்கியுள்ளனர்.
இளம் வயதினரும், டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்துபவர்களும், இப்போது பிக்ஸ்ட் டெபாசிட் (FD) முதலீட்டில் கிடைக்கும் வருமானத்தை விட அதிக லாபம் தரும் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களில் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆர்பிஐ (RBI) மற்றும் ஆஃம்பி-யின் (AMFI) டேட்டாவும் இதையேதான் தெரிவிக்கின்றன. வங்கிகளின் டெபாசிட் என்பது மெதுவான வளர்ச்சி தரும் பாதுகாப்பான முதலீடு என்பதால் ஷேர்மார்க்கெட் சார்ந்த முதலீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அதாவது, மக்கள் பலரும் சேமிப்பு என்பது பாதுகாப்புக்காக இருந்தால் மட்டும் போதாது, அது ஒரு இலக்கை நோக்கி செய்யப்படும் செயலாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். இதற்காக ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்தை முழுமையாக தவிர்த்து விட வேண்டுமா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். ஏனெனில் சில குறிப்பிட்ட முதலீடுகளுக்கு அது தேவை. ஆனால் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு அதிக முக்கிய இடம் இல்லை.
ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களில் அவசர தேவைகளுக்கும், குறுகியகால செலவுகளுக்கும் தேவையான தொகையை முதலீடு செய்யலாம். ஏனெனில் இந்த பணத்தை நம் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்கக்கூடாது. எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குவதற்கு ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும். இப்படி இருக்கையில் ஏன் டெபாசிட் திட்டங்கள் நீண்ட கால வளர்ச்சி உதவாது என்றால், டெபாசிட்டில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும். அதே அதற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் பணவீக்கத்தை விட அதிகமான இருக்க வாய்ப்பில்லை. இதுமட்டும் இல்லாமல் 2025ம் ஆண்டில் ஆர்பிஐ தொடர்ந்து டெபாசிட்டுக்கான வட்டியை குறைத்து வருகிறது.
மியூச்சுவல் ஃபண்ட்கள்: இன்றைய முதலீட்டில் முக்கிய இடம்…
2025-இல் மியூச்சுவல் ஃபண்ட்கள், குறிப்பாக SIP முதலீடுகள், சேமிப்பின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளன. மாதந்திர SIPக்களின் எண்ணிக்கை மற்றும் முதலீடுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 100 ரூபாய் கூட முதலீடு செய்ய முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டங்களில் முதலீடு செய்வதால் லாபம் கிடைப்பது மட்டும் இல்லாமல் முதலீட்டில் ஒழுக்கமும் உருவாகிறது. இதன் விளைவாக தங்களின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப முதலீட்டை பலரும் திட்டமிடுகின்றனர். அதாவது ஓய்வுகால தேவை, குழந்தைகளின் கல்வி போன்ற நீண்டகால தேவைகளுக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்ததாக உள்ளது.
ஷேர்மார்க்கெட், நம்பிக்கையுடன் முதலீடு
முன்பெல்லாம் ஷேர்மார்கெட் என்றாலே பலரும் பயப்படத் தொடங்கி விடுவார்கள். இதில் நஷ்டம் மட்டும்தான் இருக்கும் என பலரும் நம்பி இருந்தனர். ஆனால் தற்போது சூழல் அப்படி இல்லை. அதாவது தேவையான தகவல், ஆலோசனை மற்றும் அனுபவம் இருந்தால் ஷேர்மார்க்கெட் முதலீட்டில் ஜெயிக்கலாம் என்பதை முதலீட்டாளர்கள் பலரும் உணர தொடங்கியுள்ளனர்.
2025ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) விலகினாலும், இந்திய முதலீட்டாளர்கள் (DII) தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இது இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி மீது உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. நீண்டகாலத்தில் பங்குச் சந்தை முதலீடு, ஃபிக்ஸ்ட் டெபாசிட்டை விட அதிக லாபம் தரும் என்பதை முதலீட்டாளர்கள் பலரும் உணர தொடங்கியுள்ளனர்.
ஃபாண்டு மற்றும் நிலையான வருமான முதலீடுகள்
ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளைத் தவிர, அரசு கடன் பத்திரங்கள் மற்றும் கடன் சார்ந்த முதலீடுகளும் மக்கள் கவனத்திற்கு வந்துள்ளன. இவை அதிக லாபம் தராது. ஆனால் முதலீட்டில் நிலைத்தன்மையும் சமநிலையும் வழங்குகின்றன. இன்றைய நிலையில், இந்த வகை முதலீடுகள் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
தங்கம் மற்றும் வெள்ளி
2025ம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகள், முதலீட்டாளர்களுக்கு மிக அதிகப்படியான லாபத்தை வழங்கியுள்ளன. ஆனால் இனி வரும் நாட்களில் இதேநிலை தொடர வாய்ப்பில்லை. ஆனால் உங்களின் மொத்த முதலீட்டில் 5% – 10% வரை தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். இது பாதுகாப்பான முதலீடாக இருக்கும். இதில் எதிர்காலத்தில் பெரிய அளவில் லாபம் கிடைக்க வாய்ப்பில்லை.
2025ம் ஆண்டில் சேமிப்பு என்பது முழு பாதுகாப்போ, முழு அபாயமோ அல்ல. ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு தனித்தனி நன்மை உள்ளது. அதை சரியான மனநிலையோடு அணுகினால் நல்ல வளர்ச்சி இருக்கும் என்ற உண்மையை பலரும் தெரிந்து கொண்டுள்ளனர். இன்றைய சூழ்நிலையில் இந்திய குடும்பங்கள் தங்களின் பணத்தை பாதுகாப்பான, நிரந்தர வருமானம் தரும் முதலீடுகளாக மட்டும் இல்லாமல் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப ரிஸ்க் உள்ள முதலீடுகளிலும் முதலீடு செய்யலாம் என மனநிலைக்கு வந்துள்ளனர்.

